விவசாயி அடித்துக் கொலை

ராமநத்தம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். 3 முறை கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை சேர்த்துக்கொண்டவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2023-03-13 18:45 GMT

ராமநத்தம்:

ராமநத்தம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பாலகிருஷ்ணன்(வயது 34). விவசாயி. இவருக்கும், அரங்கூர் கிராமத்தை சேர்ந்த ராமர் மகள் ராதிகா(25) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராதிகாவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி மகன் ஆட்டோ டிரைவர் தினேஷ்(23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது.

இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளில் ராதிகா, தனது கள்ளக்காதலனான தினேசுடன் 3 முறை வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்து தலைமறைவானார்.

அடித்துக் கொலை

அப்போதெல்லாம் பாலகிருஷ்ணன், ராமநத்தம் போலீசில் புகார் அளிப்பதும், போலீசார் ராதிகாவை கண்டுபிடித்து, இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதுமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை பாலகிருஷ்ணன், அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்றார். பின்னர் நீ்ண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது உறவினர் ஒருவர், வயலுக்கு தேடிச் சென்றார். அப்போது வயலில் இருந்த வீட்டில் பாலகிருஷ்ணன் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

மனைவியிடம் விசாரணை

உடனே அவர், இதுபற்றி ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யா மற்றும் ராமநத்தம் போலீசார் விரைந்து வந்து இறந்து கிடந்த பாலகிருஷ்ணன் உடலை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கடலூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து, வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்காதல் பிரச்சினையில் ராதிகா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பாலகிருஷ்ணனை கொலை செய்தாரா? என்பது குறித்து ராதிகாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது கணவரை அடித்துக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்