விவசாயியிடம் நூதன முறையில் பணம் அபேஸ்

செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி விவசாயியிடம் நூதன முறையில் பணம் அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-17 18:45 GMT

திண்டிவனம் தாலுகா ஏப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துபாலகிருஷ்ணன் (வயது 32), விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய செல்போனை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், தான் தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து பேசுவதாகவும், உங்களுடைய நிலம் செல்போன் கோபுரம் அமைக்க தேர்வாகியுள்ளதாகவும், அதற்கு ரூ.30 லட்சம் முன்பணம் மற்றும் மாத வாடகையாக ரூ.35 ஆயிரம் தருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் செல்போன் கோபுரம் அமைக்க தேவையான பொருட்களை அனுப்பி வைப்பதற்கும், ஜி.எஸ்.டி. வரி மற்றும் வரைவோலை ஆகியவற்றுக்காக பணம் கட்ட வேண்டும் என்று அந்த நபர் கூறியுள்ளார். இதை நம்பிய முத்துபாலகிருஷ்ணன், அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலமும், தனது நண்பரின் போன்பே மூலமும் 14 தவணைகளாக ரூ.74,750-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் இதுநாள் வரையிலும் செல்போன் கோபுரம் அமைக்க யாரும் அங்கு வரவில்லை. நூதன முறையில் பேசி பணத்தை ஏமாற்றியிருப்பதை அறிந்த முத்துபாலகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்