கிணற்றில் மூழ்கி விவசாயி பலி
கிணற்றில் மூழ்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை தாலுகா வெளுகனந்தல் பகுதியை சேர்ந்தவர் அசோக் (வயது 50), விவசாயி. இவருக்கு சொந்தமாக பூதமங்கலம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி இரவு அசோக் தனது நிலத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் நிலத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றின் அருகில் அசோக்கின் லுங்கி மற்றும் சட்டை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது அசோக் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.