10 யூனிட்டுக்கு ரூ.7,275 மின் கட்டணம் விதிக்கப்பட்டதாக விவசாயி புகார்

10 யூனிட்களுக்கு ரூ.7,275 மின் கட்டணம் விதிக்கப்பட்டதாக விவசாயி புகார் தெரிவித்தார்.

Update: 2023-03-10 17:50 GMT

புகார் மனு

வேலூர் விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 54). இவர் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எனக்கு லத்தேரி அருகே காளாம்பட்டு பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அங்கு விவசாய பணிகளுக்காக மின் இணைப்பு பெற்றுள்ளேன். இந்த நிலையில் இந்த மாதம் எனக்கு மின் கட்டணத்துக்காக மின் ஊழியர்கள் மின் அளவை கணக்கிட்டனர். அதில் 10 யூனிட் நான் உபயோகித்ததாக கூறினர். அதற்கு மின் கட்டணமாக ரூ.7,275 செலுத்த வேண்டும் என்று மின் அட்டையில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட மின் ஊழியர்களிடம் கேட்டபோது சரிவர பதில்கள் இல்லை. நான் பயன்படுத்திய யூனிட்களுக்கு ரூ.1,062 எனவும் அதனுடன் கூடுதலாக ரூ.6,213 சேர்த்து மொத்தம் ரூ.7,275 கட்டணமாக எனக்கு விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.6,213 எதற்காக விதிக்கப்பட்டுள்ளது என மின் அளவீடு பணியாளரிடம் கேட்டபோது, சென்னையில் இருந்து இந்த தொகை விதிக்கப்பட்டதாக கூறினார்.

அதிக மின்பளு

அதிகாரிகளிடமும் முறையான பதில் இல்லை. கடந்த முறை நான் 10 யூனிட் பயன்படுத்தியதாக தெரிவித்து அதற்கு ரூ.894 மட்டுமே கட்டணம் விதித்தனர். 10 யூனிட்களுக்கு ஏன் இந்த மாறுபட்ட கட்டண விதிப்பு என்பது தெரியவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சுந்தர்ராஜ்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவை விட மின்பளு அதிகமாக பயன்படுத்தி உள்ளார். முன் வைப்பு தொகை மற்றும் மின் அளவு கட்டணம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்