கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சொந்த ஊருக்கு ஹெலிகாப்டரில் சென்ற சென்னை வியாபாரி குடும்பம்
கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சென்னையை சேர்ந்த இரும்பு வியாபாரி குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் சொந்த ஊருக்கு சென்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள பத்திரகாளி அம்மன், கன்னி விநாயகர், சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நடராஜன் என்பவர் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்தார். இதை பார்த்து கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
பேரனின் ஆசை
பாலசுப்பிரமணியன் சொந்த ஊர் தெற்கு தீத்தாம்பட்டி. இவர் தனது குடும்பத்துடன் சென்னை கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார். இங்கு இரும்பு கடை நடத்தி வருகிறார். தனது தந்தையுடன் இணைந்து நடராஜனும் கடையை கவனித்து வருகிறார். பாலசுப்பிரமணியனின் மற்றொரு மகன் ராஜதுரை என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
நடராஜனுக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டர், விமானத்தில் செல்ல வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. இதேபோல் அவரது மகன் மோகித்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது.
எனவே, பேரனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பாலசுப்பிரமணியன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்தார்.
'செல்பி' எடுத்த கிராம மக்கள்
பெங்களூருவில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மூலமாக இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். இதையடுத்து நடராஜன், அவரது மனைவி சுந்தரவள்ளி, மகன் மோகித், ராஜதுரை, உறவினர் அசோக் ஆகிய 5 பேரும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சென்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தெற்கு தீத்தாம்பட்டிக்கு வந்தனர். அவருக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.
கிராம மக்கள் ஆர்வத்துடன் ஹெலிகாப்டரை பார்த்து 'செல்பி' எடுத்துக் கொண்டனர். சிலர் ஹெலிகாப்டரில் ஏறி ஒரு ரவுண்டும் வந்தனர். பின்னர் நடராஜன் குடும்பத்தினர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, அதே ஹெலிகாப்டரில் கும்மிடிப்பூண்டி திரும்பினர். ஹெலிகாப்டர் வாடகையாக ரூ.8 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.