பெண்ணை ஏமாற்றிய போலி சாமியார் - தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்

திருப்பத்தூரில் 1.5 லட்ச ரூபாய் அளவிலான பணத்தை ஏமாற்றிய போலி சாமியாருக்கு குடும்பத்தினர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.;

Update:2022-11-28 17:23 IST

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் 1.5 லட்ச ரூபாய் அளவிலான பணத்தை ஏமாற்றிய போலி சாமியாருக்கு குடும்பத்தினர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், நரவந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நளினி. கடந்த ஆண்டு, போலி சாமியார் ஒருவர் நளினியை தொடர்பு கொண்டு, அவரது வீட்டில் செய்வினை வைத்திருப்பதாகவும் அதன் காரணமாக தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தோஷத்தை கழிக்க பல பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பி நளினி, போலி சாமியாரிடம் சுமார் ஒன்றரை லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நபர், பின்னர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு மாயமாகியுள்ளார்.

பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நளினி இது குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் அதே நபர் நளினியை தொடர்பு கொண்டு, மேலும் தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறி பத்தாயிரம் ரூபாய் பணத்துடன், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பேருந்து நிலயத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

இதையறிந்த நளினியின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, போலி சாமியாரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் பெயர் செல்வம் என்பதும் இதே போன்று பல பெண்களை அவர் ஏமாற்றியதும் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்