ஆண்டிப்பட்டியில் பரபரப்பு:அரசு பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி:போலீசார் விசாரணை

ஆண்டிப்பட்டியில் அரசு பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2023-09-21 18:45 GMT

10-ம் வகுப்பு மாணவி

ஆண்டிப்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தினமும் தனது கிராமத்தில் இருந்து பஸ்சில் பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அந்த மாணவி பள்ளிக்கு சென்றார்.

பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் அந்த மாணவி சக மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாா். பின்னர் டிபன் பாக்சை கழுவுவதற்காக அவர் வெளியே சென்றார். அப்போது திடீரென அவர் பள்ளியின் 3-வது மாடிக்கு படிக்கட்டு வழியாக வேகமாக ஏறிச்சென்றார். இதற்கிடையே சக மாணவிகள் டிபன் கழுவ சென்றவரை காணவில்லை என்று தேடினர்.

தற்கொலை முயற்சி

அப்போது மொட்டை மாடி சுவற்றில் அந்த மாணவி நின்றதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாணவிகள் அவரை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அதற்குள் அந்த மாணவி திடீரென கீழே குதித்தார். இதில் பள்ளி கட்டிடத்தின் அருகே உள்ள மரக்கிளையில் சிக்கி மாணவி கீழே விழுந்தார். இதனைக்கண்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கீழே குதித்ததில் அந்த மாணவியின் வலது கால் எலும்பு முறிந்தது. பின்னா் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தற்கொலை முயற்சி சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர், ஆசிரியர்கள், சக மாணவிகளிடம் ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்