சேத்தியாத்தோப்பு அருகே சாரம் சரிந்து விழுந்து கொத்தனார் பலி
சேத்தியாத்தோப்பு அருகே சாரம் சரிந்து விழுந்து கொத்தனார் உயிரிழந்தார்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வேல்முருகன்(வயது 45), கொத்தனார். இவர் சேத்தியாத்தோப்பு அடுத்த ஓடாக்கநல்லூர் கிராமத்தில் அரசு தொகுப்பு வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். வீடுகட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சாரத்தில் நின்று வேல்முருகன், வேலை பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென சாரம் சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வேல்முருகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.