கோவை கார் வெடிப்பு வழக்கில்முழு பின்னணியையும் கண்டறிய வேண்டும்
கோவை கார் வெடிப்பில் முழு பின்னணியையும் கண்டறிய வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
கோவை கார் வெடிப்பில் முழு பின்னணியையும் கண்டறிய வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை நேற்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கார் வெடிப்பு சம்பவம்
கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து பேசினேன். ஏற்கனவே நடைபெற்ற சம்பவத்தின் போதும் மக்கள் துன்பத்துக்கு ஆளாகினர். அப்போது கோவை சகஜ நிலைக்கு திரும்ப சில ஆண்டுகள் ஆனது.இந்த நிலையில் தற்போது அமைதியான கோவை மாநகரில் அமைதி யை நிலைநாட்டுவது அனைவரின் கடமை ஆகும்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் ஒற்றை ஓநாய் தாக்குதல் என போலீசார் தெரிவிக்கின்றனர். ஒற்றை நபருக்கு இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்த பின்னணி என்ன.? அவரை இயக்கியது யார்? என்பதை கண்டறிந்து வெளியே கொண்டு வரவேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான ஜெகர்ஹானுடன் இவர்கள் தொடர்பில் உள்ளதாக தகவல் வருகிறது. அதே நேரத்தில் யாருக்கு அரசியல் லாபம் என்ற நிலையில் பின்னணியை அறிய வேண்டும்..
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இஸ்லாமிய சமுதாயத்தை சீர்குலைக்கும் நோக்கில் உள்ளது. அதன் ஆதரவாளர்களால் இஸ்லாமிய சமூகத்திற்கும், தமிழகத்திற்கும் அமைதி சீர்குலைவு ஏற்படுகிறது. இவர்கள் யாரின் அரசியல் லாபத்திற்காக கையாட்களாக இருக்கிறார்கள் என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
கேள்விக்குறி
அண்ணாமலை முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் மாலைக்குள் அனைத்து விஷயங்களையும் போலீசார் வெளியே கொண்டு வந்தனர். எனவே தமிழக போலீசாரே விசாரிக்க வேண்டும் என்பது எனது கருத்து. அப்போது தான் இன்னும் பல உண்மைகள் வெளியே வரும். என்.ஐ.ஏ. எப்படி விசாரிக்க போகிறது என்பது கேள்விக்குறி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.