நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கு நாளை மறுநாள் தேர்தல்

கறம்பக்குடியில் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.

Update: 2022-11-16 19:15 GMT

கறம்பக்குடி தாலுகாவில் உள்ள 39 ஊராட்சிகளில் காவிரி பாசன பகுதிகளான 12 ஊராட்சிகளை தவிர மீதமுள்ள 27 ஊராட்சிகள் மற்றும் கறம்பக்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 58 பாசன குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளன. இதன் மூலம் 4 ஆயிரத்து 850 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் பகுதி வாரியாக அருகருகே உள்ள பாசன குளங்களை இணைத்து 16 நீரினை பயன்படுத்துவோர் சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சங்கங்களுக்கு தலா ஒரு தலைவர் என 16 தலைவர் மற்றும் 92 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகள் உள்ளன.

இந்த சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 7-ந்தேதி வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர். பின்னர் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்தையின் மூலம் 15 சங்கங்களுக்கான தலைவர் மற்றும் 91 ஆட்சி மண்டல குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் கறம்பக்குடி பேரூராட்சிக்குட்பட்ட கறம்பக்குடி பெரியகுளம், குமரகுளம், தென்னதிரையர் குளம், பாப்பான்குளம், மற்றும் பெத்தாரி குளத்தை உள்ளடக்கிய நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கு 2 பேர் போட்டியிடும் நிலையில் தேர்தல் களைகட்டி உள்ளது.

வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீடுவீடாக சென்று விவசாயிகளை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். பொது தேர்தலை விஞ்சும் வகையில் பிரசாரம் களைகட்டி உள்ளது. இந்த தேர்தலில் சுமார் 400 விவசாயிகள் வாக்காளர்களாக உள்ளனர். கறம்பக்குடி அக்ரஹாரம் அனுமார் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணியுடன் நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை அன்றையதினம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்