பள்ளி மாணவியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை திருமணம் செய்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். உடந்தையாக இருந்த 2 நண்பர்களும் சிக்கினர்

Update: 2022-06-24 16:54 GMT

பொள்ளாச்சி

பள்ளி மாணவியை திருமணம் செய்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். உடந்தையாக இருந்த 2 நண்பர்களும் சிக்கினர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவி

பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

கடந்த 20-ந்தேதி கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மாணவியை காணவில்லை. உடனே உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அந்த மாணவி கிடைக்க வில்லை.

இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில் பொன்மலையூரை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (வயது29) என்பவர், தேங்காய் ஏற்ற செல்லும் போது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது.

கடத்தி திருமணம்

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதைத் தொடர்ந்து அவர், அந்த மாணவிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் பொன்மலையூருக்கு சென்று மணிகண்டனை மடக்கி பிடித்தனர். அந்த மாணவியை மீட்டனர்.

விசாரணையில் அவரது நண்பர்கள் பொன்ராஜ் (27), சின்ராஜ் (30) ஆகியோர் உதவியுடன் மணிகண்டன் அந்த மாணவியை கடத்தி தாவளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்தது தெரியவந்தது.

3 பேர் கைது

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும் குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ் மணிகண்டனின் நண்பர்களான பொன்ராஜ், சின்ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்