இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற டிரைவர் கைது
கிணத்துக்கடவில் பெண்ணிடம் கூடுதல் வட்டி கேட்டு இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.;
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள மணிகண்டாபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கார்த்திக்ராஜ். இவருடைய மனவைி கலைவாணி (வயது 24), தனியார் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதி தங்களது திருமண செலவுக்காக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் கிணத்துக்கடவு கிருஷ்ணசாமி புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பூபதி சிவராஜிடம் ரூ.17 ஆயிரத்து 500 வாங்கியுள்ளனர். அப்போது பூபதி சிவராஜ் பணம் கிடைத்தவுடன் கொடுத்தால்போது என்று கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து 6 மாதத்திற்குள் ரூ.17,500-யை தவணை முறையில் திருப்பிக்கொடுத்தனர். ஆனால் பூபதி சிவராஜ் வட்டி கேட்டதால், கலைவாணி ரூ.2,300 வீதம் 2 மாதம் கொடுத்துள்ளார். ஆனாலும் அவர் கூடுதல் வட்டி கேட்டுள்ளார். இதனால் கலைவாணி பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூபதி சிவராஜ், கலைவாணியிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறித்து சென்றார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூபதி சிவராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.