அகஸ்தீஸ்வரம் அருகே இரவில் பயங்கரம் ஓட, ஓட விரட்டி டிரைவர் வெட்டிக் கொலை
அகஸ்தீஸ்வரம் அருகே நேற்று இரவில் ஓட, ஓட விரட்டி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தென்தாமரைகுளம்,
அகஸ்தீஸ்வரம் அருகே நேற்று இரவில் ஓட, ஓட விரட்டி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
வெட்டிக் கொலை
அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள தேங்காய்காரன் குடியிருப்பு கால்வாய் கரை ரோட்டில் நேற்றிரவு சுமார் 8 மணிக்கு திடீரென ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது. உடனே சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அப்போது ஒருவர் உடலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
டிரைவர்
பின்னர் போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டவரின் உடலை பார்வையிட்டனர். உடலில் முகம், தலை உள்ளிட்ட பல இடங்களில் சரமாரி வெட்டுக் காயங்கள் இருந்தன. கொலை நடந்த பகுதியில் இருந்து பல அடி தூரத்துக்கு ரத்தம் சிதறியபடி காணப்பட்டது. இதனால் அவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது.
மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் புன்னையடி பகுதியை சேர்ந்த ரெஜி மகன் பெலிக்ஸ் (43) என்பதும், டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
பெலிக்சுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கோவையில் டிரைவராக வேலை பார்த்த பெலிக்ஸ் 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் அவர் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. ஆனால் அவரை கொன்றவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
சூப்பிரண்டு விசாரணை
இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா ஆகியோர் கொலை நடந்த பகுதியை பார்வையிட்டு விசாரித்தனர்.
பிறகு போலீசார் பெலிக்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.
நண்பர் ஒருவரிடம் பணம் வாங்க செல்வதாக பெலிக்ஸ் குடும்பத்தினரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். எனவே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் அவரை யாரேனும் கொன்றார்களா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இரவு நேரத்தில் டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.