ஆட்டோவில் தவறவிட்ட செல்போனை உரிமையாளரிடம் ஒப்படைத்த டிரைவர்
ஆட்டோவில் தவறவிட்ட செல்போனை உரிமையாளரிடம் ஒப்படைத்த டிரைவரை போலீசார் பாராட்டினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்த். குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த இவர், ஊருக்கு திரும்புவதற்காக பஸ்சில் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து அவர்கள், கொளஞ்சிநாதன் என்பவருடைய ஆட்டோவில் வாரியங்காவலில் உள்ள தனது வீட்டிற்கு சென்றனர். அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு, ஆட்டோவில் டிரைவர் கொளஞ்சிநாதன் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு வந்துவிட்டார். அங்கு ஆட்டோவில் பார்த்தபோது சுமார் ரூ.40 ஆயிரம் மதிக்கத்தக்க செல்போன் கிடந்தது. இதையடுத்து அவர் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் தங்ககாசி தலைமையில் ஆட்டோ டிரைவர்களுடன் சேர்ந்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு சென்று, சப்-இன்ஸ்பெக்டர் தனசெல்வத்திடம் அந்த செல்போனை ஒப்படைத்தார். போலீசார் இது பற்றி ஆனந்திற்கு தகவல் தெரிவித்து, அவரை வரவழைத்து அவரிடம் செல்போனை ஒப்படைத்தனர். மேலும் செல்போனை ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் பாராட்டினர்.