ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள நரிமேடு இந்திரா காலனியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 38). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி கலங்காபேரி கிராமத்தில் வசித்து வந்தார். இந்தநிலையில் இரு தினங்களுக்கு முன்பு இரவு கலங்காபேரி சாலை வழியாக வீட்டிற்கு ஆட்டோவில் செல்லும் பொழுது நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நல்ல தம்பியை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.