சாலையோரம் லாரியை நிறுத்தி உயிரை விட்ட டிரைவர்

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக லாரியை சாலையோரம் நிறுத்தி டிரைவர் உயிரை விட்டார்.;

Update: 2023-06-17 11:31 GMT

லாரி டிரைவர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது 47). லாரி டிரைவர். இவர் ஆம்பூரில் இருந்து பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஆம்பூர் திரும்பினார். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வள்ளலார் அருகே லாரி வந்துகொண்டிருந்தபோது தினகரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

அப்போது அவர் உறவினர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர் வலி அதிகமானதால் அவர் சமயோசிதமாக செயல்பட்டு லாரியை சாலையோரம் சிறுத்தினார்.

இதற்கிடையே அவரை தேடி அந்த உறவினர் சென்றார். வள்ளலார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் லாரி நிற்பதை அவர் பார்த்துள்ளார். அருகில் சென்று தினகரனிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவர் பேசமுடியாமல் இருக்கையில் அமர்ந்தவாறே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவரின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்