தீக்குளிக்கப்போவதாக பெட்ரோல் பாட்டிலுடன் பஸ் முன் அமர்ந்து டிரைவர், கண்டக்டர் தர்ணா

பேரணாம்பட்டு அரசு பணிமனையில் டிரைவர், கண்டக்டர் தங்களுக்கு பணி வழங்கக்கோரி தீக்குளிக்கப்போவதாக பெட்ரோல் பாட்டிலுடன் பஸ் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-12 17:27 GMT

பணிக்கு வரவில்லை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை இயங்கி வருகிறது. இங்கிருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்சிற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் கே.வி.குப்பம் வேப்பனேரியை சேர்ந்த டிரைவர் தேவராஜ், குடியாத்தம் பட்டு கிராமத்தை சேர்ந்த கண்டக்டர் பாபு ஆகியோர்க்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும், குடியாத்தத்தை சேர்ந்த டிரைவர் ஜெய்சங்கர், கண்டக்டர் ராஜேந்திரன் ஆகியோருக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களுக்கும் பஸ்சை இயக்க பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுகுறித்து தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

மேலும் இவர்களுக்கு கிளை மேலாளர் வெங்கடேசன் தகவலும் தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வரவேண்டிய டிரைவர் தேவராஜ், கண்டக்டர் பாபு ஆகியோர் பணிக்கு வரவில்லை. கிளை மேலாளர் வெங்கடேசன் இவர்களை போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

அதைத்தொடர்ந்து மாற்று ஏற்பாடாக திங்கட்கிழமை பணி வழங்கப்பட்டுள்ள டிரைவர் ஜெய்சங்கர், கண்டக்டர் நமச்சிவாயம் ஆகியோரை வரவழைத்து பேரணாம்பட்டில் இருந்து சென்னைக்கு பஸ் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 5 மணியளவில் பேரணாம்பட்டு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சென்னைக்கு பஸ் புறப்பட தயாராக இருந்தது. அப்போது டிரைவர் தேவராஜ், கண்டக்டர் பாபு ஆகியோர் அங்கு வந்து பஸ்சை இயக்க விடாமலும், பணிக்கு வந்த டிரைவர், கண்டக்டரை மறித்து தங்களுக்கு இன்று பணி வழங்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தாங்கள் பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்கப்போவதாக கூறி பஸ்சின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவலறிந்த துணை மேலாளர் (வணிகம்) பொன் பாண்டி, பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார், கிளை மேலாளர் வெங்கடேசன், குடியாத்தம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரதீஷ் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது துணை மேலாளர் பொன்பாண்டி கூறுகையில் டிரைவர் தேவராஜிக்கு புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும், கண்டக்டர் பாபுவிற்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களும், வாரத்தில் ஒரு சனிக்கிழமையன்று கூடுதல் பணி செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

இதனை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக காலை 5.15 மணிக்கு சென்னைக்கு இயக்கப்பட வேண்டிய பஸ் 5.30 மணி நேரம் தாமதமாக 9.30 மணியளவில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டது.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை சென்னைக்கு பஸ் இயக்கப்படாததால் வழக்கமாக செல்லும் பணியாளர்கள், மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்