சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது; முதல்-அமைச்சர் பேச்சு

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2023-04-21 22:33 GMT

சென்னை,

இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளி விளையாட்டுத் திடலில் தி.மு.க. சார்பில் 2 ஆயிரம் இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.வுக்கும், இஸ்லாமியர்களுக்குமான உறவு என்பது வரலாற்று உறவு. அதுவும் இஸ்லாமியச் சகோதரர்கள் மீது கருணாநிதி எந்தளவுக்கு அளவற்ற அன்பை வைத்திருந்தார் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.

தி.மு.க. ஆட்சியின் சாதனைகள்

உருது பேசக்கூடிய முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, சிறுபான்மையினர் நல ஆணையம் அமைத்தது, 2007-ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது என இஸ்லாமியருக்கான தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போக முடியும்.

சிறுபான்மை நலன் காப்பதை ஆட்சியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உறுதி எடுத்துக்கொண்டு நடந்து வருகிறோம். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது.

கல்வி உதவித்தொகை

சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு இயற்கை மரணத்துக்கான உதவித்தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கியிருக்கிறோம்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ரூ.1,000 கல்வி உதவித் தொகை, சென்னை, கோவை மாவட்டங்களில் 2 சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதிக்கு சொந்தக் கட்டிடம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய பணிகளுக்கு அடிக்கல்

முன்னதாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம்.காலனியில் உள்ள சென்னை ஆரம்ப பள்ளிக்கு மாநகராட்சி மேயர் நிதியில் இருந்து ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் 2-ம் தளம் கட்டும் பணி, 25-வது தெருவில் மாநகராட்சியின் மூலதன நிதியில் இருந்து ரூ.1 கோடியே 73 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, 12-வது தெருவில் அமைந்துள்ள பழைய சென்னை மாநகராட்சி ஆரம்ப பள்ளியை இடித்துவிட்டு 'சிங்கார சென்னை 2.0' நிதியின் மூலம் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் முதல் தளம் கட்டும் பணி, சென்னை மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் தி.மு.க. எம்.பி. வில்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் 2-வது தளம் மற்றும் பள்ளியை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ரூ.6 கோடியே 91 லட்சம் மதிப்பீடு

மேலும் அவர், சென்னை மாநகராட்சி பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருவீதியம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, கே.சி.கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சோமையா தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ரங்கசாய் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கபிலர் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு அமைப்புகளுடன் கூடிய 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

மொத்தம் ரூ.6 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தி.மு.க. எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மயிலம் ஆதினம், ஹமீல் ஷேக் சபீர், பிலிக்ஸ் ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்