வீட்டின் கதவை உடைத்து ரூ.4½ லட்சம் நகை கொள்ளை
விழுப்புரத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.4½ லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேடு ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் குணசேகர் (வயது 60). இவர் கடந்த 10-ந் தேதியன்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
பின்னர் அவர் நேற்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 13 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீடு பூட்டியிருந்ததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகையின் மொத்த மதிப்பு ரூ.4½ லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாயை வெட்டிய மர்ம நபர்கள்
கொள்ளையடிக்க வந்த இடத்தில் மர்ம நபர்களை பார்த்து அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று குரைத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் அந்த நாயின் காலை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.