இறந்து போன குட்டியுடன் பாசப்போராட்டம் நடத்திய நாய்
கொடைக்கானலில் கண்களை குளமாக்கும் வகையில், இறந்து போன குட்டியுடன் நாய் ஒன்று பாசப்போராட்டம் நடத்தியது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாயன்புக்கு சான்று
தாயின் அன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை. இது மனிதர்களுக்கு மட்டுமின்றி மிருகங்கள், பறவைகளுக்கும் உண்டு. இதற்கு சான்றளிக்கும் வகையில் கொடைக்கானலில் நடந்த ஒரு சம்பவம் காண்போரின் நெஞ்சை நெகிழ செய்தது.
அதாவது குட்டி இறந்ததால் பரிதவித்த தாய் நாய், அதனை விட்டு செல்ல மனமின்றி அங்குமிங்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்தது. இதனை நேரில் கண்டோரின் கண்கள் குளமானது.
கொடைக்கானல் தாலுகா அலுவலகம் அருகே உள்ள புதர் பகுதியில் தெருநாய் ஒன்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 குட்டிகளை ஈன்றது. அந்த குட்டிகளுக்கு தாய் நாய் தொடர்ந்து பாலூட்டி வந்தது.
இறந்து போன நாய்க்குட்டி
இந்தநிலையில் நேற்று காலை அதன் குட்டிகளில் ஒன்று இறந்துபோனது. ஆனால் குட்டி இறந்தது கூட தெரியாமல், தாய் நாய் பாசப்போராட்டம் நடத்தியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
பல்வேறு வழிகளில், சுமார் 2 மணி நேரம் போராடி தனது குட்டியை அந்த நாய் எழுப்ப முயற்சி செய்தது. ஒருகட்டத்தில் குட்டி இறந்து போனதை அறிந்த அந்த நாய், அங்கிருந்த புல் தரையில் உருண்டு புரண்டது.
பின்னர் அங்கேயே குழி தோண்டி, அதில் குட்டியை போட்டது. சிறிது நேரத்தில் அங்கு மழை வந்ததால், இறந்துபோன குட்டியை தாய் நாய் தூக்கிக்கொண்டு புதர் பகுதிக்கு இழுத்து சென்றது.
தாய் நாயின் இந்த பாசப்போராட்ட காட்சிகளை சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ, வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.