தலையில் சிக்கிய இரும்பு நட்டை அகற்றாமல் தையல்போட்ட டாக்டர்

விபத்தின்போது டிரைவரின் தலையில் சிக்கிய இரும்பு நட்டை அகற்றாமல், அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் டாக்டர் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-06-05 17:39 GMT

லாரி கவிழ்ந்து விபத்து

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் கார்த்திகேயன் லாரியில் பாரம் ஏற்றிக்கொண்டு, ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்தார். அகரம்சேரி அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பஸ், லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

தையல் போட்டனர்

மருத்துவமனையில் உள்ள விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்ட பின்பு சாதாரண பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தலை மற்றும் தாடையில் தையல் போடப்பட்டது. முறையான சிகிச்சை இல்லாத காரணத்தால் உறவினர்கள் கார்த்திகேயனை, நேற்று மாலை மலைக்கோடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கார்த்திகேயனுக்கு மீண்டும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது விபத்தின் போது கார்த்திகேயன் தலையில் சிக்கிய இரும்பு நட்டை அகற்றாமலேயே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் கார்த்திகேயன் தலையில் சிக்கிய இரும்பு நட்டு அகற்றப்பட்டது.

இதனை அறிந்த கார்த்திகேயனின் உறவினர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டரிடம் சென்று கேட்டதற்கு, அவர் முறையான பதில் அளிக்கவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். தலையில் சிக்கிய இரும்பு நட்டை அகற்றாமல் தையல் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்