மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா - மாவட்ட கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.;

Update: 2023-06-06 09:40 GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 82 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 38 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 43 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 57 மனுக்களும் இதர துறைகள் சம்பந்தமாக 74 மனுக்களும் என மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கடந்த மே மாதம் 29-ந் தேதி திருவள்ளூர் வட்டம் வயலூர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு கலெக்டரின் விருப்புரிமை நிதியின் கீழ் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் 50 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து சென்னை புறவழிச் சாலை திட்டத்திற்காக திருவள்ளூர் வட்டத்துக்குட்பட்ட அம்மணம்பாக்கம் பகுதியில் இருந்து நில எடுப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் வீடு இழந்த மற்றும் வீடற்ற 39 நரிக்குறவர்கள் மற்றும் 13 ஆதி திராவிடர்கள் என மொத்தம் 52 நபர்களுக்கு தோப்பு புறம்போக்கு வகைப்பாடு கொண்ட நிலத்தில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்