பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பெரியசூண்டியில் சித்தி விநாயகர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பால் குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-03-05 18:45 GMT

கூடலூர்

பெரியசூண்டியில் சித்தி விநாயகர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பால் குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சித்தி விநாயகர்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரிய சூண்டியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர தேர்த்திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விசேஷ பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சித்தி விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர் கல்யாண மாலை முருகன் கோவில், அண்ணா நகர், சுண்ணாம்பு பாலம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று முக்கிய சாலைகள் வழியாக நேற்று அதிகாலையில் மீண்டும் கோவிலை அடைந்தது.

நீர் வெட்டு விழா

இதையடுத்து காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளும், மதியம் 12 மணிக்கு சின்ன சூண்டி ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால் குடங்கள், முளைப்பாரி மற்றும் பறவை காவடிகள் எடுத்து முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சித்தி விநாயகர் உள்பட பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு நீர் வெட்டு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்