நீதிமன்ற உத்தரவை மீறி இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது
நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி தேவாரம் பாடிய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக பொது தீட்சிதா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஆட்சேபனை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- பாரம்பரிய வழக்கப்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் நடராஜர் கோவில் நிர்வாகம் மற்றும் பூஜைகளை பொது தீட்சிதர்களாகிய நாங்கள் செய்து வருகிறோம். நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதிப்பதற்கு அரசாணையை அமல்படுத்தும் முன்பு பொது தீட்சிதர்களிடம் எந்தவித கருத்தும் கேட்கப்படவில்லை.
நடவடிக்கை
மேலும் உங்கள் கருத்துக்களை கேட்க அழைக்கவில்லை என்றும், அந்த அரசாணையை உடனடியாக செயல்படுத்த உள்ளோம் என்பதை தெரிவிக்கவே அழைத்தோம் என்று கூறி, அரசாணையை நிறைவேற்றுவதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் தேவையான போலீசார் அரசாணையை நிறைவேற்றுவதற்காக தயார் நிலையில் உள்ளதாக கூறினர்.
மேலும் எதிர் தரப்பினராக உள்ள பொது தீட்சிதர்களையும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்பதை செயல்படுத்தாமலும், அரசாணையை படிப்பதற்கும், அது தொடர்பாக சட்ட ஆலோசனை பெறுவதற்கும், பக்தர்களிடமும், பொதுதீட்சிதர்களிடமும் கருத்து கேட்கவும், பூஜை முறைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கலந்து ஆலோசிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு பொது தீட்சிதர்களிடம் கருத்து கேட்காமல், அரசாணை பற்றி சட்ட ஆலோசனை பெறுவதற்கு கூட கால அவகாசம் அளிக்காமலும், சட்டத்திற்கு புறம்பாக கடந்த மாதம் 19-ந் தேதி அரசாணை செயல்படுத்தப்பட்டது.
கனகசபையில் ஏறி தேவாரம்
அதன்படி தற்போதும் போலீஸ் அதிகாரிகளுடன் அனைவரும் எங்களது ஆட்சேபனையை மீறியும், எதிர்ப்பு தெரிவித்ததை மீறியும் கோவில் கனகசபை மேல் ஏறி தேவாரம், திருவாசகம் பாடியுள்ளனர்.
ஆகையால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், சட்டத்துக்கு புறம்பாகவும், பாதுகாப்பு பெற்ற தனி சமய பிரிவினரான பொது தீட்சிதர்களின் நடராஜர் கோவிலில் பாரம்பரியமான பூஜை வழிபாட்டு முறைகளையும், நிர்வாகத்தையும் சட்ட விரோதமாக போலீஸ் பலத்துடன் இடையூறு செய்வது உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும். நடராஜர் கோவிலில் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாகவும், அரசியல் சாசன உரிமைகளை மீறியும் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவது சட்டவிரோதமாகும். இதற்கு எங்களின் சட்டபூர்வமான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.