சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்

வலங்கைமான் அருகே சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-03 18:45 GMT

வலங்கைமான்:

வலங்கைமான் அருகே சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த கட்டிடம்

வலங்கைமான் வட்டார பகுதியில் உள்ள மூலால்வாஞ்சேரி கிராம ஊராட்சி, சாலபோகம் கிராமத்தில் நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியுடன் இணைந்த ரேஷன் கடை உள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ரேஷன் கடையில் அந்த ஊராட்சி பகுதியை சேர்ந்த சாலபோகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசின் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்தநிலையில் அந்த ரேஷன் கடையின் தரைத்தளம், சுற்றுச்சுவர், மேற்கூரை என அனைத்து பகுதிகளும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

புதிதாக கட்ட கோரிக்கை

மேலும் அந்த ரேஷன் கடை கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்த நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் மழை பெய்யும்போது கட்டிடத்தில் உள்ள விரிசல்கள் வழியாக தண்ணீர் கசிந்து உள்ளே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் சேதம் அடைகிறது.

தற்காலிகமாக மேற்கூரை பகுதியில் தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். இதனால் பொருட்கள் வாங்க வருபவர்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்