சேதமடைந்த மயான கொட்டகையை இடித்து அகற்ற வேண்டும்

திருமக்கோட்டையில் சேதமடைந்த மயான கொட்டகையை இடித்து அகற்ற வேண்டும் என்று கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-09-20 18:45 GMT

திருமக்கோட்டை:

திருமக்கோட்டையில் சேதமடைந்த மயான கொட்டகையை இடித்து அகற்ற வேண்டும் என்று கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சேதமடைந்த மயான கொட்டகை

திருமக்கோட்டை மெயின் ரோட்டில், அந்த ஊர் மக்கள் பயன்படுத்தும் வகையில் மயான கொட்டகை உள்ளது. இங்கு ஒரு மயான கொட்டகை தான் உள்ளது. இதைதான் அப்பகுதியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இ்ந்த நிலையில் இந்த மயான கொட்டகை தற்போது சேதமடைந்து உள்ளது.

அதாவது கொட்டகையின் நான்கு தூண்களிலும் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த மயான கொட்டகை அதன் உறுதித்தன்மையை இழந்து வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் அந்த மயான கொட்டகை எப்போது வேண்டுமானும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. எனவே அப்பகுதி மக்கள் அந்த மயான கொட்டகையை பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.

புதிதாக கட்டித்தர வேண்டும்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊராட்சி மன்றம், யூனியன் அலுவலகத்திற்கு அப்பகுதி கிராம மக்கள் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இறந்தவர்கள் உடல் எரியூட்ட வந்தால் சிரமம் ஏற்படுகிறது. எனவே அப்பகுதி கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து வலுவிழந்து காணப்படும் அந்த மயான கொட்டகையை இடித்து அகற்றிவிட்டு, சுற்றுச்சுவருடன் கூடிய புதிய மயான கொட்டகை அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்