போர்க்கால அடிப்படையில் மதகு சீரமைக்கப்படும்

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால், தண்ணீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. இதனை ஆய்வு செய்த பின்னர் போர்க்கால அடிப்படையில் மதகை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Update: 2022-09-21 18:45 GMT

பொள்ளாச்சி

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால், தண்ணீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. இதனை ஆய்வு செய்த பின்னர் போர்க்கால அடிப்படையில் மதகை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

அமைச்சர்கள் ஆய்வு

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பரம்பிக்குளம் அணை உள்ளது. இந்த அணையின் பராமரிப்பை தமிழக பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. இந்தநிலையில் அணையின் மதகு திடீரென உடைந்தது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மதகு உடைந்தது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் அணையின் வரைபடத்தை பார்வையிட்டனர். இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

6 டி.எம்.சி. தண்ணீர்

பரம்பிக்குளம் அணையில் ஏற்பட்ட இந்த நிகழ்வு மிகவும் வருத்தத்துக்குரியது. எதிர்பாராமல் ஷட்டர்கள் ஏற்றி இறக்குவதற்கு உதவும், சங்கிலி (செல்ப்) வெயிட் கழன்று விழுந்த காரணத்தால் மதகு உடைந்து விட்டது. இதனால் நீர் வழிப்போக்கில் எந்த தடையும் இல்லாததால், அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் நிலை ஏற்பட்டு விட்டது. எனக்கு தெரிந்து இதுவரை இப்படிப்பட்ட விபரீதம் எங்கும் ஏற்பட்டது இல்லை.

சங்கிலிதான், ஷட்டரை இறக்குவதற்கும், ஏற்றுவதற்கும் உதவுகிறது. அவ்வளவு அதிகமான எடை கீழே விழுந்ததால், கதவுகள் நொறுங்கி போயிருக்கிறது. தற்போது வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. காலையில் 20 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியானது. அந்த தண்ணீர் வெளியேறுகிற காட்சியை நான் பார்த்த போது, எனது மனம் வேதனையில் துடித்து விட்டது. அணையில் இருந்து 6 டி.எம்.சி. தண்ணீர் வீணாகி போய்விடும்.

மதகு சீரமைக்கப்படும்

இந்த தண்ணீர் சென்று மட்டத்திற்கு வந்த பிறகுதான், சீரமைப்பு பணியை மேற்கொள்ள முடியும். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு எடுத்து போர்க்கால அடிப்படையில் மதகை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற மதகுகள் எப்படி இருக்கிறது என ஆய்வு செய்வோம். திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் செல்வதில் எந்த பாதகமும் ஏற்படாது.

10 ஆண்டுகளாக எதுவுமே செயல்படாமல் போய்விட்டது. நான் இப்போதுதான் வந்து இருக்கிறேன். இருமாநிலங்களும் இணைந்துதான் பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது நீர்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா, கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், நெம்மாரா எம்.எல்.ஏ. கே.பாபு, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்