சரபங்காநதி தடுப்பணை நிரம்பியது தேவூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
சரபங்காநதி தடுப்பணை நிரம்பியதால் தேவூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேவூர்
சரபங்காநதி தடுப்பணை நிரம்பியதால் தேவூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சரபங்காநதி
சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை பகுதியில் உற்பத்தியாகி வரும் சரபங்காநதி ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, எடப்பாடி, தேவூர் சரபங்காநதி தடுப்பணை வழியாக அண்ணமார் கோவில் பகுதியில் காவேரி ஆற்றில் கலந்து செல்கிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காடு மலைப்பகுதியில் அதிகப்படியாக பெய்துவரும் பருவமழை தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளக் காடாக ஓமலூர், தாரமங்கலம், எடப்பாடி, அரசிராமணி, செட்டிபட்டி வழியாக தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடி அண்ணமார் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து செல்கிறது.
தடுப்பணை நிரம்பியது
இந்தநிலையில் கடந்த பல ஆண்டுகளாக சரபங்கா நதி ஆக்கிரமிப்புகளால் பல்வேறு இடங்களில் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. இதனால் தண்ணீர் முழுவதும் தேவூர் சரபங்கா நதி தடுப்பணை வழியாக செல்ல முடியாமல் போனது. கடந்த சில நாட்களாக ஏற்காடு சேர்வராயன் மலை பகுதி மற்றும் சரபங்கா நதி கரையோர பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் எடப்பாடி, குஞ்சாம்பாளையம், பழக்காரன்காடு, செட்டிபட்டி வழியாக சரபங்கா நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து தேவூர் சரபங்கா நதி தடுப்பணை வழியாக நிரம்பி செல்கிறது.
இதனால் தடுப்பணை பகுதியில் பெரமாச்சிபாளையம், வெள்ளக்கல் தோட்டம், பாங்கிகாடு, சென்றாயனூர், ஒடசக்கரை, பனங்காடு, கோணக்கழுத்தானூர், மயிலம்பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சரபங்காநதி தண்ணீரை பயன்படுத்தி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் உள்ளிட்ட பயிர் வகைகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
பாலம் அமைக்க கோரிக்கை
மேலும் தேவூர் சரபங்காநதி தடுப்பணை வழியாக 6 மாத காலத்திற்கு தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடும் என்பதால் தடுப்பணை வழியாக செல்லும் மயிலம்பட்டி, மேட்டுக்கடை பெரமாச்சிபாளையம், சென்றாயனூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தடுப்பணையில் நிரம்பி செல்லும் தண்ணீர் மீது ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர்.
எனவே இந்த தடுப்பணை வழியாக பாலம் அமைக்க வேண்டும் என தேவூர் சுற்றுவட்டார கிராம மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.