கோவைக்கு விமானத்தில் வந்த 167 பயணிகள் கண்காணிப்பு

சீனாவில் இருந்து வந்தவருக்கு கொரோனா உறுதியானது. எனவே அந்த விமானத்தில் வந்த 167 பயணிகளை தனிமைப் படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

Update: 2022-12-29 18:45 GMT


சீனாவில் இருந்து வந்தவருக்கு கொரோனா உறுதியானது. எனவே அந்த விமானத்தில் வந்த 167 பயணிகளை தனிமைப் படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

கொரோனா பரிசோதனை

சீனாவில் புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் நமது நாட்டிலும் அந்த வகை தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதுபோன்று கோவை விமான நிலையத்திலும் சிறப்பு மையம் திறக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 168 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


அதில் சேலம்மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த பயணிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதிகாரிகள் கண்காணிப்பு

உடனே அவருடைய பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அவர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்தது தெரியவந்தது. எனவே அவருக்கு இருப்பது புதிய வகை கொரோனாவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அத்துடன் இது குறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நபரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள். அதுபோன்று அந்த விமானத்தில் வந்த 167 பயணிகள் குறித்த பட்டியல் வாங்கப்பட்டு, அந்த பட்டியலில் இருக்கும் நபர்கள் குறித்து அந்தந்த பகுதி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. \

அவர்கள் அந்த பயணிகளை கண்காணித்து வருவதுடன், தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கி உள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

1,357 பயணிகள்

கோவைக்கு கடந்த 23-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 9 விமானங்கள் வந்து உள்ளது. அதில் மொத்தம் 1,357 பயணிகள் வந்து உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி உள்ளது.

குறிப்பாக கோவைக்கு சீனாவில் இருந்து விமான சேவை இல்லை. ஆனால் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் சிங்கப்பூர் வழியாக கோவை வருகிறார்கள். எனவே சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்