தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2023-04-30 15:39 GMT

வாகன ஓட்டிகள் அவதி

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை மற்றும் காந்தி மைதானத்தில் இருந்து பஸ்நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக ெசல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதுடன், காந்தி மைதானத்தில் இருந்து பஸ்நிலையம் செல்லும் சாலையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக நடைமேடையுடன் கூடிய சாலை அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு, குன்னத்தூர்.

மண்திட்டு அகற்றப்படுமா?

தாழக்குடியில் இருந்து சந்தைவிளைக்கு செல்லும் சாலையில் புத்தன் கால்வாய் ஆற்றின் மேல் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மக்கள் வசதிக்காக தற்காலிக பாலம் கட்டப்பட்டது. தற்போது புதிய பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், தற்காலிக பாலத்தில் அமைக்க பயன்படுத்திய மண் திட்டுக்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், புத்தன்கால்வாயில் தண்ணீர் சீராக பாய்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய்க்குள் அமைக்கப்பட்டுள்ள மண் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிதம்பரதாணு, தாழக்குடி. 

நடவடிக்கை தேவை

சாமித்தோப்பில் பஸ் நிறுத்தமும், பயணிகள் வசதிக்காக பயணிகள் நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள அய்யா வைகுண்டசாமிதலைமை பதிக்கு வரும் பயணிகள் இந்த நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்திருப்பது வழக்கம். தற்போது இந்த நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையின் மேல்பகுதியில் விரிசலடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்துடன் வெயிலில் நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், சரக்கல்விளை.

நிழற்குடை அவசியம்

ஆற்றூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆற்றூர் ஜங்ஷனில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால், அதை மூடி வைத்து உள்ளனர். ஆனால் இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பஸ் ஏறி செல்லும் முக்கிய சந்திப்பு என்பதால் நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜே.அகஸ்டின், ஆற்றூர்.

சுகாதார சீர்கேடு

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈச்சன் விளை கிராமத்தில் சாலையில் ஊர் அய்யா கோவில் வடக்குபகுதியில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் வடிவதற்கு வாய்ப்புகள் இல்லாததால் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை ஓரமாக வடிகால் அமைத்து மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமதாஸ், சந்தையடி.

விடுதி வசதி தேவை

திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி தரினம் செய்வதற்காக பல ஊர்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் இரவு கோவில் அருகில் தங்குவதற்காக விடுதிகள் எதுவும் இல்லை. இதனால், பக்தர்கள் மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக திருவட்டார் கோவிலின் அருகில் அரசு அறநிலைத்துறை மூலம் தங்கும் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலகிருஷ்ணன், திருவட்டார்.

பயணிகள் அமர வசதி செய்யப்படுமா?

மருங்கூரிலிருந்து மயிலாடி செல்லும் சாலை பிரிவில் சாஸ்தான் கோவில் உள்ளது. இதன் அருகே பஸ் நிறுத்தம் இருக்கிறது. இங்கிருந்து மயிலாடி, நாகர்கோவில், வழுக்கம்பாறை செல்வதற்கு பயணிகள் காத்து இருப்பார்கள். முன்பு இந்த இடத்தில் பயணிகள் அமர சிமெண்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது அவை உடைந்து கிடக்கிறது. மீண்டும் பயணிகள் அமர வசதியாக இருக்கைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.ஏ.நாராயணன், மருங்கூர்.

Tags:    

மேலும் செய்திகள்