கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்

ஆண்டியப்பனூர் அணை கட்டுவதற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால், திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-06 18:05 GMT

இழப்பீடு வழங்க வில்லை

திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் அணை கட்ட 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, நிலம் வழங்கிய 37 விவசாயிகளுக்கு ரூ.16 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு இழப்பீடு வழங்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேலூர் சிறப்பு நில ஆர்ஜித கோர்ட்டில் கடந்த 2000-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் 2016-ம் ஆண்டு ஆண்டியப்பனூர் அணைக்கு நிலம் வழங்கிய 37 விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.16 கோடியை வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும், இந்த தொகையை அரசு வழங்கவில்லை. அதனால் விவசாயிகள் வேலூர் சிறப்பு நில ஆர்ஜித கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

ஜப்தி செய்ய சென்றனர்

இதனைத்தொடர்ந்து நிலத்துக்கான இழப்பீடு வழங்காததால் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலெக்டர் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை மற்றும் வருவாய் துறையில் உள்ள அசையும் சொத்துகளான மேஜை, நாற்காலி, கணினி மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர் தாமோதிரன் ஆகியோர் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய நேற்று மாலை சென்றனர்.

பரபரப்பு

இதையடுத்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி மற்றும் அதிகாரிகள், ஜப்தி செய்ய வந்தவர்களுடன் 2 மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்தி, இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், ஒரு மாத காலத்துக்குள் விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீடு தொகை வழங்கப்படும் என உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள், பொருட்களை ஜப்தி செய்யாமல் திரும்பி சென்றனர்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்