வாயில் கருப்புத்துணி கட்டி கவுன்சிலர்கள் மறியல்
சின்னாளப்பட்டி பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து, வாயில் கருப்புத்துணி கட்டி கவுன்சிலர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சின்னாளப்பட்டி பேரூராட்சி கூட்டம், தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, செயல் அலுவலர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 10 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தபிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்றும், பேரூராட்சி அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து குடிநீர் இணைப்பு வழங்க மனு வாங்கியதை கேட்ட கவுன்சிலர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்றும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, வாயில் கருப்புத்துணியை கட்டியபடி 8 பெண்கள் உள்பட 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தநிலையில் வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள், சின்னாளப்பட்டி போலீஸ் நிலையம் எதிரே வாயில் கருப்புத்துணியை கட்டி மறியலில் ஈடுபட்டனர். தலைவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து சின்னாளப்பட்டி போலீசார், கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.