சமையல் தொழிலாளி அடித்துக்கொலை

கோவையில் சமையல் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-18 22:15 GMT


கோவை

கோவையில் சமையல் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


சமையல் தொழிலாளி


கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 47), சமையல் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜேஷ், கடந்த சில ஆண்டுகளாக கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே ஆடீஸ் வீதி பகுதியில் சாலையோரத்தில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.


இவருக்கும் காந்திபுரத்தை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண் ராஜேஷ்க்கு அடிக்கடி உணவு வந்து கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். ராஜேஷ்க்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மதுபோதையில் கிரேட் டவுன் பகுதியில் பெட்டிக்கடையின் முன்புள்ள மேஜை யில் படுத்து தூங்கினார்.


பிணமாக கிடந்தார்


மறுநாள் காலையில் பார்த்தபோது, ராஜேஷ் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். பெட்டிக்கடையின் அருகே ரத்தக்கறையுடன் உருட்டுக்கட்டை கிடந்தது.


இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். இதில் ராஜேஷ் வைத்திருந்த பணம், செல்போன் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சிறிது ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.


இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


அடித்து கொலை


ராஜேஷ் இறந்து கிடந்த இடத்தில், ரத்தக்கறையுடன் உருட்டு கட்டை கிடந்ததால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.


இதனால் கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதவிர ராஜேஷ்க்கு உணவு கொடுத்து வந்த பெண்ணையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மற்றொரு தொழிலாளிக்கு வலைவீச்சு


ராேஜஷ், கேரள மாநிலத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி ஜென்னி என்பவருடன் அடிக்கடி மது குடிப்பது வழக்கம். இதற்கிடையில், ராஜேஷ் இறந்த நிலையில் ஜென்னி திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் மதுகுடிக்கும்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொலை சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஜென்னியை வலைவீசி தேடி வருகின்றனர்.


சாலையோரத்தில் தங்கியிருந்த சமையல் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்