கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி மீண்டும் தடுத்து நிறுத்தம்

கூடலூர் அருகே கண்காணிப்பு கோபுரம் அமைக்க வனத்துறையினர் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மீண்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.

Update: 2023-09-09 22:15 GMT

கூடலூர்

கூடலூர் அருகே கண்காணிப்பு கோபுரம் அமைக்க வனத்துறையினர் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மீண்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.

கண்காணிப்பு கோபுரம்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால் பேரூராட்சி பகுதியில் சில இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, 24 மணி நேரமும் வன ஊழியர்கள் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து காந்தி நகரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு பணியை தொடங்கினர். இதைத்தொடர்ந்து விளைநிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் வனத்துறை தரப்பில் மேற்கொள்ளப்படும் பணியை பல நாட்களாக தடுத்து வந்தனர். அப்போது வனத்துறை நிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்ட வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் வருகிற 15-ந் தேதி கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஆர்.டி.ஓ. அறிவித்தார். அதுவரை கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக வனத்துறையினர் ஒத்திவைத்தனர். இந்தநிலையில் நேற்று கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டனர்.

தடுத்து நிறுத்தினர்

இதை அறிந்த கிராம மக்கள் வனத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேசினர். அப்போது அவர்கள் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே வனத்துறையினர் கோபுரம் அமைப்பதற்கான பணிகளை தொடங்குகின்றனர் என புகார் தெரிவித்தனர்.

பின்னர் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் வனத்துறையினர் பணியை தொடங்கலாம் என வனத்துறையினரிடம் தாசில்தார் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்