மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-21 18:45 GMT

சீர்காழி:

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைநீர் வடிகால் பணி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான வைத்தியநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமானோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் நெடுஞ்சாலை துறை சாலைகள் குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து தடை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவில் தெற்கு வீதி முக்கூட்டில் இருந்து கீழ வீதி வரை மழைக்காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாயினர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத் துறை சார்பில் தெற்கு வீதி முக்கூட்டில் இருந்து கீழ வீதி வரை மழைநீர் வடிகால் அமைப்பதற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது.

விரைந்து முடிக்க வேண்டும்

இந்த பணிகள் விரைந்து நடைபெறாததால் தற்போது ஒரு மாதத்திற்கு மேலாக மயிலாடுதுறை சாலையின் இரு புறங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டு பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள், வர்த்தகர்கள், வாகன ஓட்டிகள், குடியிருப்பு வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் வர்த்தக சங்கத் தலைவர் ஜி.வி.என் கண்ணன் கூறுகையில், வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட தெற்கு வீதி பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மழை நீர் வடிகால் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த பணிகள் இதுவரை முழுமை பெறாமல் பாதியிலேயே உள்ளது. பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில் தற்பொழுது கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும் சாலையின் அளவு குறுகியதால் தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் நெடுஞ்சாலை துறையை கண்டித்து வர்த்தக சங்கம் சார்பில் மழை நீர் வடிகால் பணிளை விரைந்து முடிக்க கோரி கடையடைப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்