அந்தியூர் வாரச்சந்தை அருகே பாதியில் நிற்கும் கால்வாய் அமைக்கும் பணி- வியாபாரிகள் பாதிப்பு
அந்தியூர் வாரச்சந்தை அருகே பாதியில் நிற்கும் கால்வாய் அமைக்கும் பணி- வியாபாரிகள் பாதிப்பு;
அந்தியூர்
அந்தியூர் சத்தி ரோட்டில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெறும். இதற்காக ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இவற்றை வாங்கிச் செல்ல பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் சந்தையில் கூடுவார்கள்.
மேலும் திங்கட்கிழமை நடக்கும் காய்கறிச் சந்தை மற்றும் மளிகை பொருட்கள் வாரச்சந்தைக்கு 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்வார்கள். இதனால் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் வாரச்சந்தை அருகே சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு அருகே மண் குவியலாக கிடக்கிறது. இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்களும், விவசாயிகளும், வியாபாரிகளும் சிரமப்படுகிறார்கள்.
பள்ளத்தை தாண்டி செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். முதியவர்கள் சிலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அனைவரின் நலன் கருதி மண் குவியலை அகற்றி விரைந்து சாக்கடை கால்வாயை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.