அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற கோரி காங்கிரஸ் போராட்டம் நாடு முழுவதும் இன்று நடக்கிறது

அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற கோரி தமிழகம் உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடக்கிறது என்று நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் கவுரவ் கோகாய் எம்.பி. சென்னையில் கூறினார்.

Update: 2022-06-26 23:01 GMT

சென்னை,

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இந்திய காங்கிரஸ் கட்சி நாளை (இன்று) போராட்டத்தை அறிவித்து உள்ளது. அதனுடைய ஒரு பகுதியாக தமிழகத்திலும் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படுகிறது. அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் ஒரு திட்டமாகும். அக்னிபத் திட்டத்தினால் இந்தியா முழுவதும் பல போராட்டங்கள் வெடித்துள்ளது. அரசாங்கம் ராணுவத்தை வைத்து காசை மிச்சப்படுத்த நினைக்கிறது.

6 மாதம் பயிற்சி

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எல்லைகளில் நம்மை சுற்றி உலாவிக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது, ராணுவ வீரர்களுக்கு அதிகமான பயிற்சி ஆயுதங்கள், பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும். பொதுவாக ராணுவத்தில் பயிற்சி பெற்று முன்னேறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த சுமார் 4 ஆண்டுகள் ஆகும். ஆனால் தற்போது வெறும் 6 மாதம் மட்டுமே பயிற்சி அளிக்கின்றனர்.

இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக நாளை (இன்று) போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, துணைத்தலைவர் கோபண்ணா ஆகியோர் இருந்தனர்.

மாவட்ட தலைவர் நியமனம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறை தலைவர் ராஜேஷ் லிலோத்தியா கூறியதாவது:-

தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறையை வலுப்படுத்துவதற்காக பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள கட்சியின் 78 மாவட்டங்களில் மாவட்ட தலைவர், வட்டார குழுக்கள் நியமிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறை வலுவாகவும், அனைத்து பகுதிகளில் வேரூன்றியும் உள்ளது. பிறமாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சிறந்து விளங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார். உடன் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் எம்.பி., துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் வக்கீல் ஆர்.சுதா தலைமையில் கருத்தரங்கம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்