பெண் தவற விட்ட செல்போன், பணத்தை ஒப்படைத்த கண்டக்டர்
தக்கலையில் அரசு பஸ்சில் பெண் தவற விட்ட செல்போன், பணத்தை ஒப்படைத்த கண்டக்டர்
தக்கலை,
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் பெனிஸ்கர். இவரது மனைவி ஜாக்குலின் (வயது32). இவர் நேற்று காலையில் தனது தாய் வீடான திங்கள்சந்தைக்கு சென்றுவிட்டு மீண்டும் அரசு பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார்.
பத்மநாபபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு சென்ற போது கையில் வைத்திருந்த பர்சை காணவில்லை. அதில் செல்போன், ரூ.1200 போன்றவை இருந்தது. இதையடுத்து வேறொரு போனில் இருந்து தனது செல்போனுக்கு அழைத்தார். அப்போது எதிர்முனையில் அரசு பஸ் கண்டக்டர் ரமேஷ் செல்போனை எடுத்து பேசினார். அவர் பர்ஸ் தன்னிடம் பத்திரமாக இருப்பதாகவும், பஸ் மீண்டும் தக்கலைக்கு வரும் போது சமய குறிப்பாளர் அறையில் ஒப்படைப்பதாகவும், அங்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். அதன்படி மாலையில் ஜாக்குலின் தக்கலை பஸ் நிலையத்தில் உள்ள சமயகுறிப்பாளர் அறைக்கு சென்றார். அங்கு அவரிடம் சமய குறிப்பாளர் கஜேந்திரன், ஊழியர் யோபு தாஸ் ஆகியோர் செல்போன், ரூ.1200 ஆகியவற்றுடன் பர்சை ஒப்படைத்தனர். அதனை பெற்று கொண்ட ஜாக்குலின் நன்றி தெரிவித்தார்.