இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து 3 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-13 00:15 IST

ஊர்வலம்

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், இந்தியை திணித்து வரும் மத்திய அரசை கண்டித்தும், மத்தியில் ஆட்சியை விட்டு பா.ஜ.க. அரசு வெளியேற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்துவதற்காக கடலூர் ஜவான்பவன் அருகில் மாவட்ட துணை செயலாளர் குளோப் தலைமையில், நகர செயலாளர் நாகராஜ், நகர துணை செயலாளர்கள் பாக்கியம், முருகன், நகர பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் ஒன்று திரண்டனர்.

மறியல்

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு இம்பீரியல் சாலை வழியாக சென்று, திருப்பாதிரிப்புலியூர் சூரப்பநாயக்கன்சாவடி செல்லும் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் சென்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது விலைவாசி உயர்வை குறைக்காத, வேலைவாய்ப்பை உருவாக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

73 பேர் கைது

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணை செயலாளர் வி.எம்.சேகர், மாவட்ட பொருளாளர் பாஸ்கர், நிர்வாகிகள் வடிவேல், பாலு, அமாவாசை, சக்திவேல், பன்னீர்செல்வம் உள்பட 73 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டத்தையொட்டி பிரச்சினை ஏற்படாத வகையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீமுஷ்ணம்

இதேபோல் ஸ்ரீமுஷ்ணம் தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் செய்வதற்காக ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி அண்ணா சிலையில் இருந்து வட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். பழைய போலீஸ் நிலையம் அருகில் வந்த போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் திடீரென மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட வட்ட துணை செயலாளர் சுந்தரலிங்கம், அந்தோணிசாமி, பழனிசாமி, சேவியர்ராஜன், வளர்மதி, அமுல்ராஜ், மனோகர் உள்ளிட்ட 42 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த மறியல் காரணமாக சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெண்ணாடம்

பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் செந்தில் முருகன் தலைமையில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அமர்நாத், கடைய பெருமாள் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்று அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட நிர்வாகக்குழு சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் முருகையன், நிதிஉலகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், கடவுள், ஒன்றிய துணை செயலாளர் சின்னத்தம்பி, பொருளாளர் வினோத் உள்பட 45 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். 3 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மொத்தம் 160 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்