தரமான வீடுகள் கட்டி தரக்கோரிஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு

தரமான வீடுகள் கட்டி தரக்கோரி திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-17 18:45 GMT

திட்டக்குடி, 

திட்டக்குடி தாலுகா ராமநத்தம் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் வசிக்கும் இந்து ஆதியன் (பூம் பூம் மாட்டுக்காரர்கள்) சமுதாய மக்களுக்காக தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2022-23-ம் ஆண்டு விரிவான மேம்பாட்டு திட்டத்தின் மூலம் வீடு கட்ட ஒரு வீட்டிற்கு ரூ.4 லட்சத்து 62 ஆயிரம் என ஆக மொத்தம் 22 நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு, வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வீடுகள் தரமாக கட்டவில்லை எனவும், இப்பணியில் முறைகேடுகள் நடப்பதாக கூறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராஜ்குமார், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஆதியன் சமுதாய மக்கள் திட்டக்குடி தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வருகிற 26-ந்தேதிக்குள் கட்டிட பணிகளை ஆய்வு செய்து, அதன்பிறகு கட்டிட பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்