சம்பள விவகாரத்தில் ஆணையம் விசாரணை நடத்தவில்லை

தூய்மை பணியாளர்களின் சம்பள விவகாரம் குறித்து ஆணையம் விசாரணை நடத்தவில்லை என்று கூடலூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2022-07-27 13:56 GMT

கூடலூர், 

தூய்மை பணியாளர்களின் சம்பள விவகாரம் குறித்து ஆணையம் விசாரணை நடத்தவில்லை என்று கூடலூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

நகராட்சி கூட்டம்

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அரங்கில் மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் காந்திராஜ், துணைத் தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் 79 பொருள்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்சினைகளை எடுத்து கூறினர். பின்னர் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.

கவுன்சிலர்கள் லீலா, ஆக்னஸ்:-

வார்டுகளில் குடிநீர் முறையாக வினியோகிக்கப்படுவது இல்லை. இதுதொடர்பாக பல கூட்டங்களில் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

ஆணையாளர் காந்திராஜ்:- இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். தவறு நடைபெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலர் வெண்ணிலா:- எனது வார்டில் 12 பணிகளுக்காக மன்ற ஒப்புதல் பெற இதுவரை தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. இதனால் பாரபட்சமாக அதிகாரிகள் உள்ளார்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

விசாரணை கமிஷன்

கவுன்சிலர் ஷக்கீலா:- தொடர் மழையால் குடிநீர் கிணறுகள் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் 5 கிணறுகளை தூர்வார வேண்டும் கவுன்சிலர் ராஜு:- கனமழையால் மங்குலி பாலம் உடைந்தது. ஆனால் இதுவரை தற்காலிக பாலம் அமைக்கப்படவில்லை.

கவுன்சிலர்கள் உஷா, கவுசல்யா:- தெரு விளக்குகள் எரிவதில்லை. மழையால் நடைபாதைகள் சேதம் அடைந்துள்ளது. எனவே விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் உஸ்மான்:- தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் முறைகேடு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக 5 மாதங்களுக்கு முன்பு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்க வேண்டும்.

துணைத் தலைவர் சிவராஜ்:- கவுன்சிலர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது கவுன்சிலர்கள் தூய்மை பணியாளர்களின் சம்பள விவகாரத்தில் விசாரணை நடத்தப்படாமல் உள்ளதாக ஆவேசமாக கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூறிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்