பறிமுதல் செய்யப்பட்ட உரங்களை கலெக்டர் பார்வையிட்டார்
விக்கிரவாண்டி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட உரங்களை கலெக்டர் பார்வையிட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகள் மற்றும் உரக்கலவை நிலையங்களில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்தல், உரம் பதுக்கல், உரம் கடத்தல் ஆகியவற்றை தடுக்க மாவட்ட அளவில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், விக்கிரவாண்டி வட்டாரத்தில் உள்ள உரக்கலவை நிலையங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குனர் ரமணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் எவ்வித ஆவணங்களும் இன்றி உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததும், குருணை உரங்கள் தயார் செய்ததும் கண்டறியப்பட்டு அந்த உரங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த உரங்கள் அனைத்தும் எவ்வித ஆவணங்களும் இன்றி (உர நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதற்கான ரசீதுகள் இன்றி) இருப்பதை உறுதி செய்த மாவட்ட கலெக்டர் மோகன், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் அந்த உரங்களை கைப்பற்றி டான்பெட் கிடங்கில் இருப்பு வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் 4 உரக்கலவை நிலையங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 165 மெட்ரிக் டன் யூரியா மற்றும் இதர உரங்கள் டான்பெட் உரக்கிடங்கில் நேற்று இருப்பு வைக்கப்பட்டது. இந்த உரங்களை மாவட்ட கலெக்டர் மோகன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட உர நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.