மாணவர்களிடம் கேள்விகேட்டு பொது அறிவை சோதனை செய்த கலெக்டர்

கே.வி.குப்பம் ஓன்றியத்தில் ஆய்வு பணிக்கு சென்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாணவர்களுக்கு பாடம் நடத்தியதுடன், கேள்விகேட்டு பொது அறிவை சோதனை செய்தார்.

Update: 2023-02-17 17:24 GMT

திட்டப் பணிகளை ஆய்வு

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம், நாகல் ஊராட்சியில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.4.97 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையை பார்வையிட்டார். தொடர்ந்து சொட்டுநீர் பாசன முறை, ஜடைகுட்டை நீர்நிலை தூர்வாரும் பணிகள், தரிசுநில மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றை ஆய்வுசெய்து, பயனாளிகளுக்கு தார்ப்பாலின்களை வழங்கினார்.

தரிசுநில நடவு முறையில் 8 மீட்டர் இடைவெளியில் மாமரக் கன்றுகளை நடவு செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அருகில் விளைந்திருந்த துவரைப்பயிரை பார்த்து அதன் விளைச்சல் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

பாடம் நடத்தினார்

இதன் பிறகு நாகல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அப்போது தமிழ் நாட்டின் தலைநகர் எது?, கர்நாடகமாநிலத்தின் தலைநகர் எது? என்பதுபோன்ற பொது அறிவு கேள்விகளைக் கேட்டு சோதனை செய்தார். சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து கற்றல்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தினார்.

மதிய உணவு சமையல் கூடத்திற்கு சென்று மாணவர்கள் சாப்பிடத் தயாராக இருந்த உணவை ருசிபார்த்து மேலும் வேகவைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். பின்னர் பி.கே.புரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு செய்து, திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், வேளாண் இணை இயக்குனர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குனர் அபிலா, வேளாண்மை உதவி இயக்குனர் வினித்மேக்தலின், தாசில்தார் அ.கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.மனோகரன், நாகல் ஊராட்சி மன்ற தலைவர் என்.பாலா, கீழ் ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்