தூண்டில் வளைவு அமைக்க கலெக்டர் உறுதி:திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் போராட்டம் வாபஸ்

தூண்டில் வளைவு அமைக்க கலெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Update: 2023-08-18 18:45 GMT

திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். இதையடுத்து 12 நாட்களாக நடந்த மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.

தூண்டில் வளைவு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகரில் ரூ.58 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, கடல் பகுதியில் கடினமான வடிவிலான எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும், மேலும் கடற்கரை ஒழுங்குமுறையாற்று வரைபடம் தமிழ்நாடு முழுமைக்குமான கடற்கரை பகுதிகளை உள்ளடக்கி தயார் செய்து அதன்பேரில் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. தூத்துக்குடிமாவட்டத்தில் கடற்கரை ஒழுங்கு முறையாற்று வரைபடம் பணி நிறைவு பெற்றுள்ளது.

இதற்கிடையே திருச்செந்தூர் அமலிநகரைச் சேர்ந்த மீனவ மக்கள் தங்களது ஊருக்கு தூண்டில் வளைவை ஏற்படுத்தி தர வலியுறுத்தி, கடந்த 7-ந்தேதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமாதான பேச்சுவார்த்தை

இதுகுறித்து மீனவ பிரதிநிதிகள் மற்றும் ஊர் நிர்வாகத்தினருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அமலிநகர் ஊர்மக்கள் சார்பில் சுமார் 70 பேர் நேற்று, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்களுடன் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.

போராட்டம் வாபஸ்

கூட்டத்தில் ஊர்மக்களின் கருத்துகளை கலெக்டர் செந்தில்ராஜ் கேட்டறிந்தார். தொடர்ந்து திருச்செந்தூர் அமலிநகர், ஜீவாநகர் பகுதிகளில் முறையே ரூ.58 கோடி மற்றும் ரூ.25 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியை பெற்று விரைவில் அமைக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட ஊர் மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் மீன்பிடி தொழிலுக்கு செல்ல தீர்மானித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்