மண் கடத்திய டிராக்டரை மடக்கி பிடித்த கலெக்டர்

களக்காடு அருகே மண் கடத்திய டிராக்டரை கலெக்டர் கார்த்திகேயன் மடக்கி பிடித்தார்.

Update: 2023-08-22 19:18 GMT

களக்காடு:

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று களக்காடு அரசு மருத்துவமனையை பார்வையிட்டார். அதன் பின்னர் களக்காடு போலீஸ் நிலையத்திற்கு சென்று கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அதனைதொடர்ந்து களக்காடு யூனியன் அலுவலகத்திலும், யூனியன் மூலம் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளையும் பார்வையிட்டார். தேவநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலையையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள நூலகம் பாலர் அங்காடி இவைகளையும் ஆய்வு செய்தார். அவருடன் களக்காடு யூனியன் ஆணையாளர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர்.

ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு கலெக்டர் கார்த்திகேயன் களக்காடு-நாங்குநேரி சாலையில் வந்து கொண்டிருந்த போது, மண் ஏற்றி வந்த டிராக்டரை மடக்கி பிடித்து சோதனையிட்டார். அதில் எவ்வித அனுமதியின்றி மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுபற்றி கலெக்டர் வருவாய்துறையினர் மூலம் களக்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் பணகுடியை சேர்ந்த பாலகிருஷ்ணனை (வயது 37) கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்