தென்னை நார் தொழில் முடங்கி கிடக்கிறது
மின் கட்டண உயர்வால் தென்னை நார் தொழில் முடங்கி கிடக்கிறது என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
கிணத்துக்கடவு
மின் கட்டண உயர்வால் தென்னை நார் தொழில் முடங்கி கிடக்கிறது என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
பயணிகள் நிழற்குடை திறப்பு
கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா மற்றும் தாமரைக்குளம் குமரேசன் நகரில் 7.40 லட்சம் செலவில் தார்சாலை, நான்கு வழிச்சாலை அருகே 6.18 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைக்க பூமி பூஜை நடந்தது.
இதற்கு கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பாப்பு என்ற திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். கிணத்துக்கடவு ஒன்றிய குழு தலைவர் நாகராணி கனகராஜ், துணைத்தலைவர் எம்.எம்.ஆர்.துரைசாமி, கிணத்துக்கடவு ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் தாமரை தென்னரசு வரவேற்றார். பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்ததோடு பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.
மின் கட்டண உயர்வு
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மின் கட்டண உயர்வு என்பது தி.மு.க. அரசு தமிழக மக்களுக்கு முன்கூட்டியே சொல்லாமல் கொடுத்துள்ள பரிசு. 6 மாதத்துக்கு முன்புதான் மின் கட்டணத்தை உயர்த்தினார்கள். இப்போது மீண்டும் உயர்த்துகிறார்கள்.
இதனால் தென்னை நார் தயாரிப்பு, பித் கட்டி தயாரிப்பு போன்றவை நடைபெறும் சிறிய தொழிற்சாலைகள் பாதிக்கப்படும். ஏற்கனவே அந்த தொழில்கள் முடங்கி கிடக்கிறது. திடீர், திடீரென பால் விலை, குடிநீர் வரி போன்றவை உயர்த்தப்படுகிறது. இதன் காரணமாக தி.மு.க. அரசு விரைவில் முடிவுக்கு வரும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும்.
இளைஞர்கள் ஆர்வம்
அ.தி.மு.க. என்றால் எடப்பாடி பழனிசாமி தான். இதை எதிர்தரப்பினர் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை முடிவில் கோர்ட்டு தீர்ப்பு உறுதி செய்யும். புதிதாக இளைஞர்கள், இளம்பெண்கள் அ.தி.மு.க.வில் ஆர்வத்தோடு இணைகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட கவுன்சிலர் ராதாமணி, பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், கட்சி நிர்வாகிகள் டி.எல்.சிங், முருகவேல், ஜி.வி. சண்முகம், கிருஷ்ணன், செந்தமிழ் செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் கலைக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.