காபி அறுவடை தொடங்கியது

கூடலூர் பகுதியில் அரபிக்கா ரக காபி அறுவடை தொடங்கி உள்ளது.

Update: 2022-11-11 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் பகுதியில் அரபிக்கா ரக காபி அறுவடை தொடங்கி உள்ளது.

காபி சீசன்

நீலகிரி மாவட்டம் ஊட்டி, நடுவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் விளைகிறது. கூடலூர் பகுதியில் பச்சை தேயிலைக்கு இணையாக காபி, குறுமிளகு, இஞ்சி, ஏலக்காய் உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. அதிகபட்சமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அரபிக்கா, ரொபஸ்டா ரக காபி பயிர்கள் விளைகிறது.

நவம்பர் மாத தொடக்கத்தில் நன்கு விளைந்து விதைகள் அறுவடைக்கு தயாராகி விடுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கூடலூர் பகுதியில் அதிக கனமழை பெய்ததால் காபி விதைகள் அறுவடை சீசன் தாமதமாக தொடங்கி உள்ளது. இதில் அரபிக்கா ரக காபி விதைகள் காய்த்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதைத்தொடர்ந்து பல இடங்களில் அரபிக்கா ரகம் அறுவடை சீசன் தொடங்கப்பட்டு உள்ளது.

அறுவடை செய்யும் பணி

ஆனால், ரொபஸ்டா ரக காபி விதை அறுவடை சீசன் தாமதமாகும் சூழல் காணப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த கட்ட சீசன் தொடங்குவதற்கு தாமதம் ஏற்படலாம் என விவசாயிகள் கருதுகின்றனர்.

இதுகுறித்து கூடலூர் காபி வாரிய உதவி விரிவாக்க அலுவலர் ராமஜெயம் கூறியதாவது:-

கடல் மட்டத்தில் இருந்து அதிக குளிர் உள்ள பகுதியில் அரபிக்கா ரக காபி விளைகிறது. இதன் சுவை, மணம் அதிகம் கொண்டது. இதனால் ஆங்கிலேயர்கள் கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் அரபிக்கா ரகத்தை பயிரிட்டனர். ஆனால் எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாகக்கூடியது. 2- வதாக ரொபஸ்டா ரகம் மிதமான தட்பவெப்ப பகுதியில் வளரக்கூடியது. இந்த ஆண்டில் கூடலூர் பகுதியில் அதிக மழை பெய்ததால் காப்பி அறுவடை சீசன் தாமதமாகி உள்ளது. ஆனால், அரபிக்கா ரக விதைகள் அறுவடை சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓவேலி மற்றும் காபி வாரிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு உள்ள அரபிக்கா விதைகள் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்