தீவுகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு தீவுகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2023-01-25 18:45 GMT

தூத்துக்குடியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு தீவு பகுதிகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

குடியரசு தினவிழா

இந்திய நாட்டின் குடியரசு தினவிழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் ஆங்காங்கே சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தீவுகள்

இந்தநிலையில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து பணியை அதிகரித்துள்ளனர். தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அவர்கள் சந்தேகப்படும்படியாக ஏதேனும் படகுகள் சுற்றித்திரிகிறதா என்று கண்காணித்தனர். மீனவர்களின் படகுகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதேபோன்று தூத்துக்குடி அருகே உள்ள வான்தீவு, காசுவாரி தீவு, காரிசல்லி தீவு ஆகிய தீவு பகுதிகளிலும் சந்தேகப்படும்படியாக ஏதேனும் நடமாட்டம் உள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மீனவ கிராமங்களிலும் மக்களை சந்தித்து, சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்