மதபோதகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதபோதகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட மத போதகர்கள் ஐக்கியம் சார்பில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 300 திருச்சபைகளும், 25 ஆயிரம் உறுப்பினர்களும், 300 திருச்சபை போதகர்களும் உள்ளனர். பல ஆண்டுகளாக இறை பணியோடு கூடிய சமூகப் பணியை, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு மதச் சுதந்திர அடிப்படையில், யாருக்கும் எவ்வித இடையூறும் இன்றி செய்து வருகிறோம். இதனிடையே சில அமைப்பினர், மத போதகர்கள் மீது தாக்குதல் நடத்தியும், அவர்களை பணி செய்ய விடாமல் அச்சுறுத்தி அவமானப்படுத்தியும் வருகின்றனர். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.