துப்புரவு பணி டெண்டரை ரத்து செய்ய வேண்டும்

துப்புரவு பணி டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.;

Update: 2023-06-30 20:20 GMT

சிவகாசி,

துப்புரவு பணி டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

மாநகராட்சி கூட்டம்

சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சங்கீதா இன்பம் தலைமை தாங்கினார். துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் முன்னிலை வகித்தார். கமிஷனர் சங்கரன் வரவேற்றார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களின் மீது கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர்.

டெண்டர் ரத்து

அப்போது அவர்கள் கூறியதாவது:-

மண்டல தலைவர் குருசாமி:- மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேரும் குப்பைகளை அகற்ற ரூ.8 கோடியே 81 லட்சம் செலவில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் அந்த பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. பெயரளவுக்கு தான் நடக்கிறது. இதனால் வார்டு பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த டெண்டரை உடனே ரத்து செய்ய வேண்டும். பணிகளை சுத்தமாக செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் (இதற்கு ஆதரவு தெரிவித்து 26 கவுன்சிலர்கள் மேயர் மற்றும் கமிஷனரிடம் கடிதம் கொடுத்தனர்).

துப்புரவு பணி

கவுன்சிலர் குமரி பாஸ்கர்:- ஒப்பந்த பணிக்கு வந்த ஊழியர்கள் தங்க மாநகராட்சி சார்பில் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடகை ஏதாவது வசூலிக்கப்படுகிறதா?. எனது வார்டு உள்பட நகர் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

கமிஷனர் சங்கரன்:- 52 டன் குப்பைகள் சேகரித்து அகற்ற வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சேதுராமன்: அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி ஒதுக்கப்படுவது இல்லை. ஆனால் வரி பணம் அனைத்தையும் துப்புரவு பணி காண்டிராக்டரிடம் கொடுத்துவிட்டு அவர் எப்போது வேலை செய்வார் என்று காத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.

பாக்கியலட்சுமி:- நீங்கள் ஊரில் இல்லை என்றால் துப்புரவு பணிகள் நடப்பதில்லை. இதை யாரும் கண்காணிப்பதும் இல்லை. 150 பேர் வேலை செய்வதாக கூறுகிறார்கள். ஆனால் எந்த பணியும் நடப்பது இல்லை. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்